Donnerstag, 15. Januar 2015

பாணர்

ஸ்ரீரங்கம் அருகில் ஒரு அழகான சிற்றூர். இவ்வூரில் பாணர் இனத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் இருந்தார். இப்பக்தர் ஸ்ரீரங்கநாதர் மீது மிகுந்த பக்தியும், நன்றாகப் பாடும் திறமையும் கொண்டவர். ஆலயம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்ய அவர் பிறந்த குலம் தடையாக இருந்தது. அதனால், அவர் தினமும் காவிரியின் கரையில் நின்றபடி ரங்கநாதர் கோயிலைப் பார்த்து இரு கரம் கூப்பித் தொழுது பாடிச் செல்வார். ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் லோக சாரங்கி. ஒருநாள் இவர் கோயில் கைங்கர்யம் செய்வதற்காக காவிரியில் நீராடிவிட்டு வந்தார். பாணர் அர்ச்சகர் வரும் பாதையில் நின்று கண்களை மூடி ரங்கநாதரை நினைத்து மிக உருக்கமாக பாடிக்கொண்டிருந்தார். அர்ச்சகர் வருவதை இவர் அறியவில்லை. உடனே அர்ச்சகர், ஏய்... பாணா? ஒதுங்கி நில். நான் கோயிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும், என்றார். இறைவனிடம் மனம் லயித்திருந்த பாணனுக்கு அர்ச்சகர் கூறிய வார்த்தைகள் கேட்கவில்லை. அதனால், அர்ச்சகர் ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசினார்.
கல் பாணர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. பாணர் கண் திறந்து பார்த்தார். ஐயோ! அர்ச்சகர் வரும் பாதையில் நின்று அபச்சாரம் செய்துவிட்டோமே என்று வருந்தி தள்ளி நின்று மீண்டும் பாட ஆரம்பித்தார். அர்ச்சகர் கோயிலுக்கு போனார். அங்கே ரங்கநாதரைப் பார்த்த அர்ச்சகர் பயந்து திகைத்தார். சிலையின் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஐயோ! இது என்ன? அபச்சாரம்? என்று கதறியபடி சுவாமியின் நெற்றியில் இருந்து வழியும் ரத்தத்தைத் துடைத்தார். ரத்தம் நிற்கவில்லை. மறு படியும் துடைத்தார். ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது. ரங்கநாதா! இது என்ன சோதனை? யாரால் இது விளைந்தது? என்று உருக்கமாகக் கேட்டார். அப்போது, லோகசாரங்கி! உமது செயலால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிக்கரையில் என் பக்தன் பாணன் மீது கல் வீசினீரே, அக்கல் அவன் மீது மட்டும் பட்டு ரத்தம் வடியவில்லை. என் நெற்றியிலும் பட்டு ரத்தம் வழிகிறது. நான் பக்த பாராதீனன் இல்லையா? என்று அசரீரி ஒலித்தது. ரங்கநாதா! தவறு செய்துவிட்டேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று கதறினார். ஹே... லோக சாரங்கா! என் பக்தன் பாணனை உம் தோளில் சுமந்து என் சன்னதிக்கு அழைத்து வாரும். அப்போதுதான் ரத்தம் நிற்கும் என்றது அசரீரி. உடனே அர்ச்சகர் அங்கிருந்தவர்களிடம் எல்லோரிடமும் தான் செய்த தவறையும், பெருமாளின் உத்தரவையும் கூறி, பாணனை அழைத்துவர காவிரிக் கரைக்கு சென்றார். பாணரிடம் நடந்த விபரத்தைச் சொல்லி பொறுத்தருளுமாறு வேண்டினார்.

சுவாமி! நான் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன். நான் கோயிலுக்குள் வரக் கூடாது. என்னால் வரமுடியாது என்றார். இல்லை பாணரே! நீர் அப்படி சொல்லக்கூடாது. நீர் பெரும் பாக்கியம் செய்தவர். பெருமாளே உம்மை என் தோளில் சுமந்துவரச் சொன்னார் என்றார் அர்ச்சகர். பாணர் அர்ச்சகர் தோளில் அமர சங்கடமும் கூச்சமும் கொண்டார். ஆனால், அரங்கன் கட்டளையாயிற்றே. என்ன செய்வது என்று கண்களை மூடி ஒரு கணம் ஸ்ரீரங்கநாதரை தியானித்தார். அவரைத் தோளில் ஏற்றிச் சுமந்து ரங்கநாதர் சன்னதி முன் கொண்டுவந்து இறக்கினார் அர்ச்சகர். அரங்கனின் சன்னதிக்குள் சென்றார் பாணர். மனம் உருக அரங்கனின் திருமுடி முதல் திருவடி வரை வர்ணனை செய்து பத்துப் பாடல்கள் பாடினார். அப்படியே அரங்கனின் ஜோதியில் ஐக்கியமானார்.

வியாழக்கிழமை


Mittwoch, 14. Januar 2015

பாவம்-2

ஒரு அந்தணரும் அவரது மனைவியும் தங்கள் இரண்டு வயது குழந்தையுடன் காட்டுப்பாதையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் களைப்பாய் இருக்கவே, தாகசாந்தி செய்ய எண்ணினர். அந்தணர், மனைவியை குழந்தையுடன் ஒரு மரத்தடியில் அமர வைத்தார். அவள் களைப்பில் மரத்தடியில் படுத்தாள். கூஜாவுடன் அருகில் தெரிந்த நீரோடையை நோக்கிச் சென்றார்.அந்த மரத்தின் மீது யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு கிளைகளிடையே தங்கி நின்றது. சற்றுநேரத்தில் காற்றடிக்கவே, கிளையில் தொக்கி நின்ற அம்பு படுத்திருந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் தைத்தது. அது விஷம் தோய்ந்த அம்பு. விஷம் உடலில் பரவி அவள் இறந்தாள். அப்போது அங்கே ஒரு வேடன் வந்தான். ஒரு பெண் இறந்து கிடப்பதையும், அருகில் அவளது குழந்தை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தான். இதற்குள் அந்தணரும் வந்து விடவே, வயிற்றில் அம்பு தைத்து இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.அருகில் நின்ற வேடன் மீது சந்தேகம் கொண்டு, என்ன நோக்கிலடா என் மனைவியைக் கொன்றாய்? நீ வேட்டைக்காரனா? அல்லது காமுக நோக்குடன் இப்படி செய்தாயா? நீ நல்லவன் என்றால், கடவுளின் மீது சத்தியமாக இங்கிருந்து ஓடக்கூடாது. என்னோடு உன் ஊர் மன்னனைக் காணவா! அவன் தீர்ப்பளிக்கட்டும், என்றார்.வேடன் கெஞ்சினான்.அந்தணரே! உமது மனைவியை நான் கொல்லவில்லை.
நான் ஏதுமறியாதவன். உமது மனைவியின் இறப்புக்கு காரணமும் எனக்குத் தெரியாது, என கெஞ்சினான்.அவனை நம்பாத அந்தணர், மனைவியின் உடலை தோளிலும், ஒரு கையில் குழந்தையுடனும் அரண்மனைக்கு வந்தார். மன்னனிடம் புகார் சொன்னார்.வேடன் மன்னனிடம், தான் ஏதுமறியாதவன் என புலம்பித் தீர்த்தான். அவனை சேவகர்கள் அடித்தும் மிரட்டியும் பார்த்தன். மன்னா!என்னைக் கொல்லுங்கள். வேண்டாம் என சொல்ல வில்லை. ஆனால், நான் சாகும் முன் உண்மை செத்துவிடக்கூடாது, என்றான்.மன்னன் அவனை சிறையில்அடைத்து விட்டு, அந்தணரிடம், உம் மனைவியின் ஈமக்கிரியையை முடித்து விட்டு நாளை வரும், என சொல்லிவிட்டான்.மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று, சுந்தரேஸ்வரா! தவறான தீர்ப்பை நான் வழங்கி விடக்கூடாது. அதற்கு நீயே அருள் செய்ய வேண்டுமென பிரார்த்தித்தான். அன்றிரவு கனவில் வந்த சுந்தரேஸ்வரர், மன்னா! நீ நாளை மாசிவீதியிலுள்ள மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கு செல். உண்மை தெரியும், என்றார்.மறுநாள் மன்னனும் அந்தணரும் மாறுவேடத்தில் அங்கு சென்றனர்.அப்போது சமையலறையில் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால், பேசுபவர்களின் உருவம் தெரியவில்லை.

தூதனே! நம் எமதர்ம மகாராஜா, இந்த மண்டபத்தில் திருமணம் செய்யப்போகும் மணமகனின் உயிரைப் பறிக்க உத்தரவிட்டுள்ளார்.இவனோ மணமேடையில் ஆரோக்கியத்துடனும், உறவினர்கள் புடைசூழவும் இருக்கிறான். என்ன செய்வது? என்றது ஒரு குரல். மற்றொரு குரல், தூதர் தலைவரே! கவலை வேண்டாம். நேற்று காட்டில் இருந்த அந்தணரின் மனைவியின் மீது மரத்தில் தங்கியிருந்த விஷ அம்பை எப்படி அவளது வயிற்றில் விழச்செய்து உயிரைப் பறித்தோமோ, அதே போல இந்த தெருவில் நிற்கும் காளையை மிரளச்செய்து மண்டபத்திற்குள் விரட்டி விடுவோம். கூட்டம் கலைந்தோடும் போது, காளை மணமகனை முட்டிக் கொல்லட்டும், என்றது. மன்னரும் அந்தணரும் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர். வேடனிடம் மன்னிப்பு கேட்டார் அந்தணர். சிறையில் வைத்ததற்காக மன்னன் அவனுக்கு ஏராளமான பொருளை நஷ்ட ஈடாக கொடுத்து அனுப்பி வைத்தான்.

புதன்கிழமை


Dienstag, 13. Januar 2015

கவலை

கண்ணன் கவலையுடன் இருந்தான். கோயிலுக்கு சென்ற அவன் சரஸ்வதி சன்னதிதானத்தில் நின்று கொண்டு, அம்மா, தாயே! என் வகுப்பில் படிக்கும் பல மாணவர்கள் என்னை விட நன்றாகப் படிக்கிறார்கள். நேற்று குருநாதர் ராமாயணம் கற்றுத் தந்தார். நான் ஏதோ ஒரு மனநிலையில் இருந்தேன். ஆசாரியர் சொல்லித் தந்ததை கவனிக்கவில்லை. கடைசியில் ராவணனின் தம்பி யார் என்று கேட்டார். நான் என் காதில் விழுந்த ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி வைப்போமே என்று லட்சுமணன் என சொல்லி விட்டேன். மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குருநாதர் என்னை போடா ஞானசூன்யமே என விரட்டி விட்டார். நான் வருத்தப்பட்டேன். அதே நேரம் அந்த கேலி சிரிப்பு என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தாயே! தயவு செய்து என்னையும் ஒரு கலாவல்லவன் ஆக்கி அருள் புரிவாய், என்றான்.சரஸ்வதி சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான். கருணைக்கடலான அந்த கல்வி தெய்வம் கண் விழித்தாள்.
மகனே! கவலைப்படாதே, யாரையும் நான் அறிவின்றி படைப்பதில்லை. ஆனால், குரு சொல்லிக் கொடுக்கும் போது, நீ அதைக் கவனியாமல், விளையாடிக் கொண்டிருந்தது உன் தவறுதானே! இனியேனும் இத்தவறைச் செய்யாதே. மேலும், பிறர் கேலி செய்வதை நாம் பொருட்படுத்தக் கூடாது. அந்த கேலிச்சொற்களை புகழுரையாக மாற்றிக் காட்ட வேண்டும். இதற்காக நான் உனக்கு அருள்புரிய மாட்டேன். நீயே சுயகட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும். அப்படி செய்து பார். மற்றவர்களை விட நீயே உயர்ந்த ஸ்தானத்திற்கு வருவாய், என்று கூறி மறைந்தாள். கண்ணன் இன்னொரு குருகுலத்திற்கு சென்றான். அவன் தன் குருகுலத்தில் இருக்க தகுதியுடையவன் தானா என அங்கிருந்த ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டார். கண்ணன் அவரிடம், நடந்த விஷயத்தைச் சொன்னான். ஐயா, எனக்கு படிப்பில் அக்கறையின்மை இருந்தது. அதனால் ஏற்கனவே படித்த குருகுலத்தில் இருந்து விலக்கப்பட்டேன். நீங்கள் கேட்கும் கேள்விளுக்கு எனக்கு பதில் தெரியாது. என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக் கொண்டால், இனியேனும் நன்றாகப் படித்து தங்களிடம் நற்பெயர் பெறுவேன். என் மீது வீசப்பட்ட கேலிச் சொற்களை புகழுரையாக மாற்றிக் காட்டுவேன், என்றான். அவன் மீது இரக்கப்பட்ட குருநாதர், அவனை குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். கண்ணன் புத்தகமும் கையுமாக அலைந்தான். வகுப்பில் மிக கவனமாக பாடங்களைக் கேட்டான். எதைக் கேட்டாலும் மணியடித்தது போல டாண் டாண் என பதில் சொன்னான்.

தினமும் அச்சிறுவனுக்கு ஆசிரியர் வேப்பிலை துவையல் வைத்து கஞ்சி கொடுத்தார். கண்ணன் துவையலை நாக்கில் தடவிக் கொண்டே கஞ்சி குடிப்பான். ஆனால், அது வேப்பிலை துவையல் என்ற சமாச்சாரமே அவனுக்கு தெரியாது. ஏனென்றால், சாப்பிடும் போதும் புத்தகத்தை கீழே வைக்க மாட்டான். படித்துக் கொண்டே சாப்பிடுவான். படிப்பின் மீதிருந்த அக்கறையில், சாப்பாட்டு சுவையெல்லாம் அவனுக்கு தெரியவே இல்லை. எல்லாப் பாடங்களிலும் நன்றாகத் தேறினான்.  ஒருநாள் குரு புத்தகமும், கஞ்சியுமாய் இருந்த சீடனை அழைத்தார். குரு கூப்பிடவும், துவையலை கண்ணன் எடுத்து வாயில் தடவவும் சரியாக இருந்தது. வாய் கசந்தது. அதற்கான காரணத்தை குருவிடம் கேட்டான். மாணவனே! நான் தினமும் உனக்கு வேப்பிலை துவையல் தந்தும் நீ படிப்பின் மீதிருந்த அக்கறையால் அதன் சுவையை உணரவில்லை. இன்று திடீரென கூப்பிடவும் சுவை தெரிந்தது. இந்த துவையலுக்கு பயந்தே பல மாணவர்கள் ஓடிவிட்டனர். நீயும் இன்னும் சிலரும் தான் எனது பரீட்சையில் தேறியுள்ளீர்கள். அதிலும் நீ மற்ற மாணவர்களை விட முன்னணியில் இருக்கிறாய், என்று பாராட்டினார். கண்ணன் மகிழ்ந்தான்.

செவ்வாய்க்கிழமை


Montag, 12. Januar 2015

ஆசை-3

இலங்கை வேந்தன் ராவணனுக்கு ஓர் ஆசை.தேவர்கள் எனக்கு அடங்கி பயந்து நடக்கிறார்கள். பல அரக்கர்களை நான் வென்றிருக்கிறேன். என்றாலும் அருகில் உள்ள தமிழகம் மட்டும் என் ஆளுகைக்குள் வராமல் உள்ளது. எனவே தமிழகத்தை வென்று அதை நம் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை.உடனே அவன் தன் புஷ்பக விமானத்தில் தன்னுடைய சகாக்களுடன் பொதிகை மலைக்கு வந்தான். அங்கே அகத்திய முனிவரைச் சந்தித்தான். ராவணனின் நோக்கம் அகத்தியருக்குப் புரிந்துவிட்டது. தவவலிமையால் ஒப்புயர்வற்ற சிவபெருமானிடமிருந்து ஒப்பற்ற தமிழ்மொழியைப் பெற்ற அகத்திய முனிவருக்கு வணக்கம், என்றான் பணிவுடன். சிவனைக்குறித்து பலவகையான தவங்கள் இயற்றி, அதன் பயனாய் மூன்று கோடி வருடம் ஆயுளைப்பெற்ற ராவணன் என் இருப்பிடத்திற்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வா! வா! என்று வரவேற்றார் அகத்தியர். ராவணன் தன் வருகையின் உள்நோக்கத்தை தானே வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தார் அகத்தியர்.
ராவணா! இலங்கையில் இருக்க வேண்டிய நீ தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதன் நோக்கம் என்னவோ? என்று கேட்டார் அகத்தியர்.முனிவர் பெருமானே! தமிழகத்தை என் ஆட்சிக்கு உட்படுத்த எண்ணியிருக்கிறேன். அதன்பொருட்டு நிலைமையை ஆராய வந்துள்ளேன் என்றான் ராவணன். ராவணா! நீ யாழ் இசைப்பதில் வல்லவன் அல்லவா? என்று கேட்டார் அகத்தியர். ஆம். பெரும் வல்லவன். அதிலென்ன சந்தேகம்? என்று ஆணவத்துடன் பதில் சொன்னான். அப்படியானால் நீ முதலில் என்னை யாழ் இசையில் வெல்ல வேண்டும். என்னை ஜெயித்தால் மட்டுமே, தமிழகத்தை வெற்றி கொள்ள நினைக்கும் உன் எண்ணம் ஈடேறும். இல்லாவிட்டால் உன் ஆசை நிறைவேறாது என்றார் அகத்தியர். அப்படியே ஆகட்டும். யாழ் இசைப்பதில் உங்களிடம் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன், என்றான் ராவணன். அகத்தியருக்கும், ராவணனுக்கும் யாழ் இசை போட்டி நடைபெறப் போகிறது என்ற செய்தி எங்கும் பரவியது. ராவணன் யாழ் மீட்பதில் வல்லவன் என்பது அகிலம் அறிந்த ஒன்று. ஆனால், அகத்தியருக்கு யாழ் வாசிக்கத் தெரியும் என்பது இப்போதுதான் மக்கள் கேள்விப்பட்டார்கள். இசைப்போட்டிக்குரிய மேடை அமைக்கப்பட்டது. போட்டியைக்காண மக்கள் குழுமியிருந்தார்கள். போட்டி ஆரம்பமாயிற்று.

ராவணா! முதலில் நீ வாசிக்கிறாயா? அல்லது நான் வாசிக்கட்டுமா? என்றார் அகத்தியர். ராவணனுக்குத் தன் திறமையில் அதீத நம்பிக்கை இருந்தது. அகத்தியர் தோற்கப்போவது என்னவோ உறுதி. அப்படியிருக்க அவர்தான் முதலில் வாசிக்கட்டுமே என்று மனதிற்குள் நினைத்தவாறு, முதலில் நீங்களே வாசியுங்கள். தங்களது வாசிப்பில் மயங்கி என் உள்ளம் உருகிவிட்டால், நீங்களே வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளலாம், என்றான். ராவணா! உன் உள்ளம் உருகுகிறதா இல்லையயா? என்பதை வெளியில் இருப்பவர்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? இதோ பார், அனைவரும் பார்க்கும்படி இந்த பொதிகை மலையையே சிவனின் அருளால் யாழ் மீட்டி உருக வைக்கிறேன் என்றார் அகத்தியர். அக்ததியர் யாழை மீட்டினார். அவர் யாழை வாசிக்க, வாசிக்க பொதிகை மலை உருகியது. இதைக்கண்ட எல்லோரும் திகைப்படைந்தார்கள். ராவணன் வியப்படைந்தான். கல்லும் கரையும் அளவிற்கு ராவணன் யாழ் இசையைப் பழகவில்லை. ஆகவே வெட்கித் தலைகுனிந்தான். முனிவர் பெருமானே! நான் தோற்றுவிட்டேன். இந்த நாட்டை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதற்கு தாங்களும், தங்கள் இசையும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியபடி தலைபணிந்து வணங்கினான். அவனது கர்வம் அடங்கியது.